ஏதோ இரண்டு விழிகள் எந்தன்
இதயத்தை அதிசயமாகப் பார்த்தன
ஏதோ இரண்டும் கரங்கள் அதை
இறுக்கிப் பிழிந்துகொண்டே இருக்கின்றன
அவ்வப்போது தளர்த்துவதெல்லாம்
அடுத்த முறுக்கலின் ஆயத்தம்
தளர்த்தி முறுக்கி உயிரின் கழுத்தை
இறுக்கி இறுக்கிப் பிழியும்போது
அதுவரை நானே அறியாதிருந்த
ஆழத்தில் வாழுமென் உயிரின் சாரம்
சொட்டுச் சொட்டாய்த் திவலை திவலையாய்
சொல்லைப் போலப் பொங்கிப் பூத்து
உயிராய் உயிராய் உதிர்வதைப் பார்க்க
அந்தப்
பட்டாம் பூச்சிக் கண்களிலே
பரவசம் படபடக்கிறது
எந்தத் துன்பமும் எனக்கு இல்லை
துன்பம் தவிர வேறொன்றுமே இல்லை
இந்த இரண்டுமே இல்லை என்பதாய்
உணர்விலாமல் பார்க்குமோர் எல்லை
அசையாமல் இருக்கிறேன்
அபிப்பிராயங்கள் இல்லாமல்
இன்பம் துன்பம் இரண்டுமே இல்லாமல்
அதிகாலையில் நீண்டதோர் கணநேரம்
ஸ்தம்பித்துவிட்டது சுவாசம்
இதுதான் நானா?
இதையும் பார்த்துக்கொண்டிருப்பது நானா?
நட்டநடு நெஞ்சில்
கட்டைவிரல் பிழம்பாய்க்
காண்பதும் பிழம்பின் கண்ணா? இல்லை
பிழையின் கண்ணா?
இன்னமும் இதைப்பிழிந்து
என்னம்மா தேடுகிறாய்?
ஆட்டம் சலிக்கவில்லையா?
ஆள்செத்துச் சவமானபின்னும்?
No comments:
Post a Comment