நண்பர்களே!
நான்தான் நதியில் விழுந்த மலர்!
திட்டமில்லை, அது தேவையில்லை என்று புரிந்துவிட்டது.
திசையில்லை, அது என்னை எது அழைத்துச் செல்கிறதோ அதன் வசத்தில் இருப்பதால்.
இலக்கில்லை, இலக்குதான் என்னை ஈர்த்துத் தன்னை நோக்கித் தருவிக்கிறது என்பதால்.
ஆம். எது அழைக்கிறதோ அதைத்தான் நாம் தேடுகிறோம். எது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதோ அதைத்தான் நாம் கோருகிறோம், அதற்காகவே ஏங்குகின்றோம்.
இதைப்புரிந்துகொள்ள எனக்கு இத்தனை ஜென்மங்கள் தேவைப்பட்டன. உங்களுக்கு அப்படி ஆகவேண்டாம் என்பதால் என்னை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் புறப்பட்டிருக்கிறேன்.
சம்மதமா?
நதியில் விழுந்த மலர் என்பது என்னுடைய புதிய கவிதைத் தொகுதியின் தலைப்பாகிவிட்டது.
கவிதை எப்பொழுதும் புதியது, கன்னத்து முத்தம் போல, கதிரவனைப் போல, கண்ணீர்த்துளியைப் போல.
ஜூன் 19 ஆம் தேதி எளிய முறையில் இந்த நூல் கிருஷ்ண கான சபாவிலுள்ள காமகோடி அரங்கில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு எம் முரளி வெளியிட, கிருஷ்ண கான சபாவின் திரு பிரபு அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். சபாவின் திரு ரங்கராஜன் அவர்களுக்கும் பிரதி வழங்கப்பட்டது.
என்னுடைய சொற்பொழிவுகளுக்கெல்லாம் தவறாது வந்து, கேட்டு ரசித்து என்னை ஆசீர்வதித்து வரும் பழம்பெரும் எழுத்தாளரான திரு சங்கரி புத்திரன் அவர்களுக்கும், ஒவ்வொரு முறையும் எங்களுக்கு நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் அன்போடு உணவு வாங்கி ஆதரிக்கும் திருமதி ரத்னா அர்விந்துக்கும் முரளி இந்த நூலை வழங்கினார்.
என்னுடைய நூல்களை e books / apps வடிவில் என் குரலோடு கொண்டு வர இசைந்துள்ள Swathi Solutions அதிபர் திரு சுதாகர் அவர்களுக்கும் நூல் வழங்கப் பட்டது.
இதை, குறுகிய கால அவகாசத்தில், கோவை விஜயா பதிப்பகம் சிறப்பாக அச்சிட்டு வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
நூலுக்கு, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு எம் கிருஷ்ணன் அவர்கள் ஒரு வாழ்த்துரையும், மரபின் மைந்தன் திரு முத்தையா அவர்கள் ஒரு விமர்சனமும் தந்திருக்கிறார்கள்.
வாங்கித்தான் பாருங்களேன்!






No comments:
Post a Comment